தற்கால தமிழர் சமூகத்தில் சாதி!!
ஒட்டுமொத்தமாகவே பிரிவினை வாதங்கள் எதிர்க்கப்பட வேண்டியவை தான் என்றாலும் இலங்கை தமிழரின் சாதி தொடர்பான நிலைப்பாடுகள் அவ்வளவு மெச்சிக்கொள்ளும் படியாக இல்லை.. தமிழ்நாட்டைப் போல சாதி தொடர்பான கலவரங்கள், வன்முறைகள், ஆணவக்கொலைகள், இட ஒதுக்கீடு, என வெளிப்படையாக சாதித்தடிப்பு இல்லாதபோதும் முன்பு ஒரு காலத்தில் என ஆரம்பிக்கும் கதைகளில் ஏராளமாக அவை காணக்கிடைக்கின்றன,,
அனைவராலும் அடையக்கூடிய கல்வி முறையால் , நாங்கள் சிறுபான்மை இனத்தவர் என்ற ரீதியில் இன வேற்றுமையை முதன்மையாக முன்னிறுத்துவதால் , புலிகள் காலக் கட்டுப்பாடுகளால் அவை புறக்கணிக்கத்தக்க வகையில் இல்லாமல் ஆக்கப்பட்டிருந்தாலும்,, கல்யாணத்தில் மட்டும் சாதி,, யைத் தீவிரமாகக் கடைபிடிக்கும் வரைக்கும் சாதி தொடர்பான நிலைபாடு மனதளவில் மாற்றம் காணாது.. பரம்பரை பரம்பரையாக அதை சொல்லிக் கொடுத்துக் கடத்த வேண்டும் என்பதில் இன்றையமக்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள்..
சாதி என்ற ரீதியில் எந்தவிதமான சலுகைகளும் அவர்களுக்கு இக்காலத்தில் கிடைக்காது விட்டாலும், காலம் காலமாக அவர்கள் அனுபவித்து வந்தவற்றை அடுத்த சந்ததிக்கு கடத்தி அறியச் செய்வதில் ஒரு வகையான வீண் பெருமை உணர்வு,, அதாவது இந்தக் காலத்தில் கல்வியில் அல்லது செல்வத்தில் ஒருவன் அவர்களை முந்திச் செல்வானாயின், அந்த ஆற்றாமையை கொஞ்சம் தணித்துக்கொள்ள அவர்கள் பயன்படுத்தும் ஊடகம்..
கூடிக்குறையும் சாதிப்படி நிலைகள் வழியே கூட சாதி பற்றிய ஆக்ருதி மாற்றம் காண்பதில்லை.. ஒவ்வொரு சாதியும் அதற்கென சீராக கட்டமைக்கப்பட்ட தொழில் முறையை ஆரம்பத்தில் கொண்டிருந்தது போல தடித்தனமும், பெருமையும், அதற்கேற்றால் போல் அவர்களிடம் குடி கொண்டிருக்கிறது.. தனக்கு விழும் அதே அடியை கொஞ்சம் கூட வலிமை குறையாது கீழே இருப்பவனுக்குக் கொடுப்பதற்கு யாரும் தயங்குவதில்லை..
யாராவது ஒருவர் வெளிப்படையாகப் பொதுவெளியில் நான் இன்ன சாதி என்று விளம்புவது அநாகரிகமான, ஒவ்வாத நடத்தையாக இக்காலத்தில் அணுகப்படுவது பாராட்டத்தக்க விசயம் என்றாலும், இன்று வரை பத்திரிக்கை திருமண விளம்பரங்களில் சாதியை விபரித்தே வரன் தேடப்படுகிறது.. அதாவது தங்களைப் பகுத்தறிவாளர்களாகவும் வெளியே காட்டிக் கொள்ள வேண்டும் அதே வேளை சாதியையும் காப்பாற்றியாக வேண்டும்..
இது தான் மிகவும் அபாயகரமான நிலை.. வெளிப்படையாக சாதி வெறி கொண்டவர்களைக் கூட முறையான கல்வி முறைகளால் திருத்தி விடலாம்.. ஆனால் அனைத்து விளக்கமும் இருந்தும், படித்திருந்தும், அதை மறைமுகமாகத் தீவிரமாக கடைபிடிக்கும் கூட்டம் தான் இக்காலத்தில் அதிகம்.. இவர்களை திருத்தி எடுக்கவே இயலாது, பிழை என்று அறிந்தும் திருத்திக் கொள்ள மனம் இல்லாதவர்கள், வீம்புக்குக் கடைப்பிடிப்பவர்கள் இவர்கள்..
சமீப காலமாக காலம் காலமாய் மெருகேற்றப்பட்டு வந்த பகுத்தறிவும் சிந்தனைகளும் சமூகத்தின் கைகளில் தாராளமாக கிடைக்கப் பெற்றதன் பொருட்டு, அநேகமானவர்களின் மூளைக்குள் சாதி ஒழிப்பு பற்றிய புரிதல் விதை தூவப்பட்டு இருந்தாலும் பரம்பரை பரம்பரையாக பின்பற்றப்பட்ட சாதி தொடர்பான நிலைப்பாடு முற்றாக இல்லாது போக குறைந்தது இன்னும் ஐந்து தலைமுறைகள் தேவைப்படும்.. அதுவும் கலப்புத் திருமணங்கள் நடந்தால் ஒழிய.. ஆனால் மொத்த திருமணங்களில் அதன் விகிதம் மிகச்சொற்பம்..
ஏதாவது ஒரு தலைமுறை இனி மேல் நாங்கள் இன்ன சாதி என்று எங்கள் சந்ததிக்குச் சொல்ல மாட்டோம் என்று சங்கல்பம் எடுத்துக் கொண்டால், எந்த விதமான லாபமோ நஷ்டமோ இக்காலத்தில் கிடைக்காது வெறுமனே வீம்புக்குக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் சாதி தொடர்பான மறைமுகமான நிலைப்பாட்டை இலகுவில் தகர்த்தெறியலாம்.. ஆனால்,,
@perawritings
No comments:
Post a Comment